மனிதனுக்கு தேவை
மாற்றமல்ல; விழிப்பு உணர்வே! – ஜே.கிருஷ்ணமூர்த்தி.
J. Krishnamurthi.
Jiddu Krishnamurti
Indian write
Jiddu Krishnamurti pencil drawing |
நெருக்கடி நிலையை இந்தியாவில் அறிவித்திருந்த இந்திராகாந்தி, ஆலோசனைக்காக தத்துவ மேதை ஜே.கிருஷ்ணமூர்த்தியிடம் வந்திருந்தார்.
‘‘நான் ஒரு புலியின் மீது ஏறி அமர்ந்துவிட்டேன். இறங்க முடியாமல் தவிக்கிறேன்’’ என்றார் இந்திரா.
‘‘புலியிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்
என்பதையும் அறிந்திருப்பீர்களே..?’’ என்றார் ஜே.கே.
‘‘அப்படியானால், என்னை நான் மாற்றிக்கொள்ளத்தான்
வேண்டுமா?’’ என்று இந்திரா கேட்க,
‘‘மாறுதல் என்பது தாற்காலிக சந்தோஷம் தரலாம். ஆனால், அதுவே தீர்வாகாது.மனிதனுக்குத் தேவை மாற்றமல்ல; விழிப்பு உணர்வே!’’ என்றார் ஜே.கே.
அதன் பின்னர், நெருக்கடிநிலை விலக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் நடந்து, பல்வேறுவழக்குகளில் கைதாகி, இந்திரா ஜெயிலுக்குப் போனார். மீண்டும் அடுத்த தேர்தலில் வெற்றி கிடைத்தது. அந்தச் சமயத்தில், ‘‘நான் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் வார்த்தைகளைக் கேட்டு விழிப்பு உணர்வு அடைந்து, சோதனைகளைத் தாங்கிக்கொள்வது என முடிவு எடுத்தேன். அதன் பலனாகவே, மீண்டும் எனக்கு வெற்றி கிட்டியிருக்கிறது’’ என்று மனம் திறந்து சொன்னார் இந்திரா.
ஆந்திர மாநிலம் மதனப்பள்ளியில் 1895-ல், ஒரு தாசில்தாரின் எட்டாவது
குழந்தையாகப் பிறந்தார் ‘ஜிட்டு’ கிருஷ்ணமூர்த்தி. அவரது பத்தாவது வயதில்
தாயார் மரணம் அடையவே, தந்தை நாராயணய்யா சென்னைக்குக் குடி பெயர்ந்து,அடையாறில் அப்போது அன்னிபெசன்ட் அம்மையாரின் தலைமயில் இயங்கி வந்த பிரம்ம ஞான சபையில் உதவிச் செயலாளராக வேலைக்குச் சேர்ந்தார். கிருஷ்ணமூர்த்தியும் அவரது தம்பி நித்யாவும் சபைக்குத் தத்துக்
கொடுக்கப்பட்டார்கள். அவர்களுக்கு ஆங்கிலேய முறைப்படி கல்வியும், பல்வேறு நாடுகளில் சிறப்புப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
குண்டலினி யோக முறையைக் கற்றுத் தேர்ந்தார் கிருஷ்ணமூர்த்தி.
1925-ம் ஆண்டு தம்பி நித்யாவின் மரணம், கிருஷ்ணமூர்த்திக்கு முழுமையான விழிப்பு உணர்வைக் கொடுத்தது. ‘ நெருங்கியவரின் மரணத்தின்போது நாம் கண்ணீர் வடிப்பது, உண்மையில் இறந்தவருக்காக அல்ல; நாம் முன்பு போல் வலிமையாக இயங்க முடியாது, அவர் மூலம் நமக்கு இனி சந்தோஷமோ, உதவிகளோ கிடைக்காது என்பதாலேயே அழுகிறோம்’ என்பதைக் கண்டுகொண்டார். 1929-ம் வருடம் ‘அனைத்துலக ஆசான்’ என்ற பட்டத்தையும், கோடிக்கணக்கான டொலர் மதிப்புள்ள சொத்துக்களையும் தூக்கி எறிந்த கிருஷ்ண மூர்த்தி, ‘‘நான் யாருக்கும் குருவாக இருக்க விரும்பவில்லை. எந்த அமைப்பிலும் கட்டுப்படாமல் சுதந்திரமாக இருந்தால்தான், மக்களுக்குச் சுதந்திரம் பற்றி என்னால் விளக்கிச் சொல்ல முடியும்’’ என்றார்.
‘‘கடவுள்கள், கோயில்கள், புனித நூல்கள், சாதியம், மொழிப்பற்று, தேசப்பற்று… எல்லாமே மனித ஒருமைப்பாட்டுக்கு எதிரானவை. மத மாற்றம், கொள்கை மாற்றம் போன்றவை மனித குலத்துக்கு எவ்வித நன்மையும் செய்யாது.
மனிதருக்குத் தேவை மாற்றமல்ல; விழிப்பு உணர்வே!’’ என்று தனது 90-வது வயதில் மரணமடையும் வரை, உலகெங்கும் சுற்றிப் போதித்தார் ஜே.கே.
ஜே.கே வைப் புரிந்துகொள்ளவும், பின்பற்றி நடக்கவும் மிகக் கடினமானவர் என விமர்சனங்கள் உண்டு. ஆனால், ‘மனிதருக்குத் தேவை மாற்றமல்ல; விழிப்பு உணர்வே!’ என்ற அவரது மந்திரச் சொல்லுக்கு இன்றுவரை மாற்றுக் கருத்து இல்லை.
நன்றி : எஸ்.கே.முருகன் , பாசீனிவாசன்